திருப்பூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பி வருவோர் மீது திருப்பூர் மாநகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை குழுவினர் சமூக வலைதளங்களை கண்காணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
இதில் பிரசாந்த்குமார்( 32) என்பவரின் முகநூல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது தெரிய வந்தது. இது குறித்து கடந்த 8ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாந்த்குமார் பீஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், ஜார்கண்ட் மாநிலம் லேட்டஹர் மாவட்டம் ஹெகிகரா கிராமத்தில் தலைமறைவாக இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பிரசாந்த்குமாரை காவல்துறை ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை குழுவினர் கைது செய்து மாவட்ட நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தினர்.
அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை நேற்று திருப்பூர் அழைத்து வந்தார்கள். குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்திய பின்னர் பிரசாந்த் குமாரை சிறையில் அடைத்தனர்.