தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன் பட்டியை சேர்ந்த விமல், செல்லப்பிரியா தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என்று 3️ குழந்தைகள் இருக்கின்றன. கஞ்சா வழக்கில் தொடர்புடைய விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு அதே கிராமத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் செல்ல பிரியா தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின்னர் சென்ற 4 மாதங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையான விமல், தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கஞ்சா வழக்கின் கைதாகி சிறைக்கு சென்று வந்தது. குறித்து இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமல், தன்னுடைய மனைவி செல்லப்பிரியாவை காலணிகளாலும், கைகளாலும் சரமாரியாக அடித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அதே ஊரில் வசித்து வரும் செல்லப்பிரியாவின் உடன் பிறந்த அண்ணனான செல்லப்பாண்டி (34) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விமல் சென்றுள்ளார்.
மைத்துனர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துவிட்டு, அதன் பிறகு இரவு சமயத்தில் போதையில் விமலின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மனைவி செல்லபிரியாவுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுத்துவிடு, இல்லையென்றால் என்னுடன் கேரளாவுக்கு அனுப்பி வை, இல்லாவிட்டால் அவளை வெட்டி கொன்றுவிடு என்று செல்லப்பாண்டியிடம் விமல் கூறி இருக்கிறார். அதன் அடிப்படையில், தன்னுடைய தங்கை செல்லப்பிரியாவிடம் உன் கணவர் சொல்வதைக் கேட்டு அவருடன் சேர்ந்து வாழ தொடங்கு என்று செல்லப்பாண்டி தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதனை ஏற்க மறுத்த செல்லப்பிரியா தனக்கு விமலுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை எனவும், உன்னுடைய வேலையை மட்டும் பார் என்றும் தன்னுடைய அண்ணனிடம் தெரிவித்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் கோபமடைந்த செல்லபாண்டி, தன்னுடைய தங்கை செல்லப்பிரியாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார். செல்லப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து பார்த்தபோது செல்லப்பிரியா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர், அங்கிருந்த விமல் மற்றும் செல்லப்பாண்டி உள்ளிட்ட இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதோடு, செல்லப்பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு நடுவே இந்த சம்பவ இடத்தில் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி தலைமையிலான காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த செல்லப்பிரியாவின் உறவினர் சிவப்பிரியா என்பவர் வழங்கிய புகாரில், கூடலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு கொலை செய்யப்பட்ட செல்லப்பிரியாவின் அண்ணன் செல்லப்பாண்டி, கணவர் விமல் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.