நாட்டில் மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். பல தாய்மார்கள் இந்த மதுவினால் அனுபவிக்கும் துன்பம் என்னவென்று யாராலும் வெளியில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்த மது என்ற அரக்கன் தமிழக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறான்.
அதோடு, தமிழகத்தில் நடைபெறும் பல சாலை விபத்துகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு முழுமுதற் காரணமாக, இருப்பது இந்த மது மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில், சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒரு நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி கடலில் மீன் பிடித்து விட்டு வீட்டிற்கு வந்து மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த உறவினரின் 2 வயது சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த அருவருக்கத்தக்க சம்பவம் தொடர்பாக சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரினடிப்படையில், அந்த நபரை ராயபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னை போக்சூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி எம். ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, அவருக்கு 20 வருட கால சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி ராஜலட்சுமி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட நபரை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.