முன்பெல்லாம் ரவுடிகள் யாரையாவது கடத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று தனியாக ஒரு திட்டம் வகுத்து அதன்படி செயல்படுவார்கள். அவர்கள் அப்படி திட்டம் வகுப்பதற்கே சற்றேற குறைய ஒரு வார காலம் தேவைப்படும்.
அப்படி திட்டம் வகுத்து செயல்பட்டால் கூட ரவுடிகள் பல சமயங்களில் காவல்துறையினிடம் சிக்கிக் கொள்வார்கள்.
இப்படி கடத்துவதற்கான தனியாக திட்டம் வகுத்து செயல்பட்ட காலமெல்லாம் மலையேறிப்போய் தற்போது திரைப்படங்களைப் பார்த்து அதன் மூலமாக சாட்சியே இல்லாமல் ஒருவரை கொலை செய்வது எப்படி? மாட்டிக்கொள்ளாமல் ஒருவரை கடத்துவது எப்படி? என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் சில சமூக விரோதிகள்.
அந்த வகையில், தலைநகர சென்னையில் சூது கவ்வும் திரைப்பட பாணியில் தன்னை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்து ஒரு இளம் பெண் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களிடமே 50000 பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமான சூது கவ்வும் திரைப்படத்தில் சொந்த மகனே தன்னுடைய தந்தையிடம் பணம் பறிக்க திட்டமிட்டு கடத்தல் நாடகமாடுவார். அப்படி ஒரு சம்பவம் தற்சமயம் நிஜ வாழ்விலும் நடந்திருக்கிறது. சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் வருவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய தாயின் கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை சில மர்ம நபர்கள் பூந்தமல்லியில் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50000 ரூபாய் பணத்தை நேரடியாக வந்து கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாகவும் கூறி மிரட்டுகிறார்கள் என்று மிகவும் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
மகள் கடத்தப்பட்டதாக அறிந்த இளம் பெண்ணின் தாயார் இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணின் தொலைபேசிக்கு வந்த எண்ணை வைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் உதித்தனர் தொடர்ச்சியாக அந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்துப் பேசி இருக்கிறார்கள் காவல்துறையினர் அப்போது எதிர்தரப்பில் பேசிய ஒரு மர்ம நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் இதன் காரணமாக, காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே அந்த இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர் இந்த நிலையில் தான் அவர் வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே தனியாக நின்று கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இளம் பெண்ணை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் கோயம்பேட்டில் நின்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை கடத்தி சென்றதாகவும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறினார். அதன் பிறகு சற்று நேரம் சென்ற பிறகு, இந்த இடத்தில் இறக்கி விட்டு, விட்டு சென்றதாகவும் கூறி இருக்கிறார். இவருடைய கருத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்படி ஆய்வு செய்ததில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இளம்பெண்ணும் அவருடன் வந்த 2 தோழிகள் மற்றும் ஒரு வாலிபரும் பைக்கில் வந்து அந்த பகுதியில் இறங்கி டீ கடையில் சவகாசமாக அமர்ந்து டீ குடித்துவிட்டு, உரையாடியதும் அதன் பிறகு தோழியின் செல்ஃபோனை வாங்கிய அந்த இளம்பெண் தனியாக சென்று உரையாடிவிட்டு அதன் பிறகு எல்லோரும் மீண்டும் அந்த இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்றது பதிவாகி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இளம்பெண்ணிடம் தங்களுடைய அதிரடி விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினரின் அதிரடியால் பயந்து போன இளம்பெண், தான் நண்பருடன் ஊர் சுற்றுவதற்கு அதிகமாக பணம் தேவைப்பட்டதால், சூதுகவ்வும் அணியில் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயற்சி செய்ததாக வாக்குமூலமளித்திருக்கிறார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளம்பெண் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு அறிவுரை தெரிவித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.