பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் தமிழக அரசின் சார்பாக தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் முக்கிய அதிகாரிகள் என்று பலர் பங்கேற்று கொண்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு தான் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் பரிசுத்தொகை தொடர்பாக தமிழக அரசின் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.