சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ காதல் மற்றும் அடிதடியில் மாணவர்களிடையே ஒரு ஆர்வம் காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலை பள்ளியில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 1200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கே தலைமை ஆசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியில் அண்மைக்காலமாக மாணவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தப் பள்ளியில் களக்காடு அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர் 12 ஆம் வகுப்பு பொறியியல் பெரிவில் படித்து வந்ததாக தெரிகிறது. அதே பிரிவில் களக்காடு பகுதியைச் சார்ந்த இன்னொரு மாணவரும் படித்து வந்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் படிக்கும் வகுப்பில் ஒரு மாணவனின் புத்தகம் காணாமல் போய்விட்டது. அந்த புத்தகத்தை தேடி பார்த்தபோது அது மற்றொரு மாணவரின் பையில் இருந்திருக்கிறது. இது குறித்து இரண்டு தரப்பு மாணவர்களிடையே மோதல் உண்டாகி, இதனால் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், பள்ளி வளாகத்தில் 12-ம் வகுப்பு பொறியியல் பிரிவு மாணவர் நேற்று உணவு சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த களக்காடு மாணவருக்கும், இவருக்கும் இடையே மறுபடியும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் பொறியியல் பிரிவு மாணவரின் முதுகில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த அந்த மாணவர் வலியில் அலறி துடித்தார்.

இந்த சம்பவம் குறித்து மற்ற மாணவர்கள் தலைமை ஆசிரியர் ராஜேஷ் பெல்மேனுக்கு தகவல் வழங்கினர். அவரும், மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் காயமடைந்த மாணவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பிறகு அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி ரஜித் சதுர்வேதி தலைமையில் களக்காடு துணை ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் காவல் துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். சக மாணவரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மாணவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அரசு பள்ளியில் மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி உள்ளது.