சென்னை பெரம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தினேஷ்குமார், கௌசல்யா தம்பதியினர் வசித்து வந்தனர். தினேஷ்குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் சிறு,சிறு கூலி வேலைகளையும் பார்த்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் தன்னுடைய மனைவியிடம் வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்ற தினேஷ்குமார், பேருந்தில் பயணம் செய்த போது சென்னை காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் செல்போனை தினேஷ்குமார் அவர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து பறித்து கொண்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனை கண்ட பேருந்தில் பயணம் செய்த சக பயனியர்கள் தினேஷ்குமாரை மட்டும் பிடித்து கண்ணகி நகர் சுங்கச்சாவடி அருகே இருக்கின்ற காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ்குமார் மீது கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உட்பட பல காவல் நிலையங்களில் பத்துக்கும் அதிகமான செல்போன் திருட்டு, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்த சூழ்நிலையில்தான் ஸ்டீபனிடம் திருடிய செல்போனை தன்னுடைய நண்பனான ராமச்சந்திரன் எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார் தினேஷ்குமார்.
மேலும் தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யாவை தொலைபேசியில் அழைத்த காவல்துறையினர், தங்களுடைய கணவர் தினேஷ் குமார் செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய செல்போனை அவருடைய நண்பரிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதனைக் கேட்ட தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யா மற்றும் அவருடைய தாய் உள்ளிட்டோர் மூலக்கொத்தளத்தில் இருக்கும் தினேஷ்குமாரின் நண்பரிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளனர். அதன் பிறகு அந்த செல்போனை கண்ணகி நகர் காவல் துறையிடம் இருவரும் ஒப்படைத்தனர்.
இதற்கு நடுவில் செல்போன் கிடைத்துவிட்டபடியால் புகார் எதுவும் வேண்டாம் என்று தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் ஸ்டீபன். ஆகவே தினேஷ்குமாரை எச்சரிக்கை மட்டும் செய்து எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். அதன் பிறகு வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார். அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த தினேஷ்குமாருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டு, சுயநினைவின்றி கீழே சரிந்தார். உடனடியாக தினேஷ்குமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தினேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து திருவிக நகர் காவல் துறையினர் வழக்கு பதிந்தது விசாரித்தனர். இதற்கு நடுவில் செல்போன் திருட்டு வழக்கில் தினேஷ்குமாரை கண்ணகி நகர் காவல் துறையினர் தாக்கியதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார் என்று திரு வி க நகர் காவல் நிலையத்தில் தினேஷ்குமாரின் சகோதரர் செந்தில்குமார் புகார் ஒன்றை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த தினேஷ்குமார் உடலில் எந்த விதமான காயமும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.