மனிதனாக பிறந்த எல்லோருக்கும் மனக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அந்த மன கஷ்டத்தையும் கடந்து நாம் பயணித்தால் தான் நாம் நினைத்த இடத்தை நம்மால் அடைய முடியும்.
நம்முள் ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும், அந்த திறமையை கண்டுபிடிப்பதில் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நமக்குள் இருக்கும் திறமை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் அந்த திறமையை வைத்து நாம் எப்படி முன்னேறலாம் என்பதை பற்றி யோசித்து செயல்படுவது மிகவும் அவசியம்.
நம்முடைய லட்சியத்தை நோக்கி முன்னேறும்போது அதற்கு பல்வேறு இடையூறுகள் வரத்தான் செய்யும். ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல் நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த வகையில், சென்னை பெரியமேடு அல்லிக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்ற நபர் டிக் டாக் செயல் இருந்தபோது தன்னுடைய நடன வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானார். இதனை தொடர்ந்து, அவருக்கு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அதோடு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் இருக்கின்ற குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரமேஷ் நடித்திருந்தார். அதோடு ரஜினி நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடனம் ஆடி இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆனால் குடும்பத்தில் உண்டான பிரச்சனையின் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.