fbpx

கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமி: திரிணாமுல் காங். நிர்வாகி மகனின் அட்டூழியம்…!

மேற்கு வங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21). பராஜ்கோபால் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். பிறந்தநாள் விழாவில் அதே கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கலந்து‌ கொண்டார். இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சிறுமியை பராஜ்கோபால் மற்றும் அவனது நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் .

மேலும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தங்கள் மகள் சம்பவம் நடைபெற்ற மறுநாள் உயிரிழந்துவிட்டதாகவும், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதால் எங்கள் மகளின் உடலை அன்றே தகனம் செய்துவிட்டோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இது பற்றி அந்த சிறுமியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகளை பிறந்தநாள் விழாவில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறந்தநாள் விழாவுக்கு பிறகு, இரவு எங்கள் மகளை சிலர் காரில் வந்து விட்டு சென்றனர்.

மிகுந்த உடல் வலியால் கஷ்டப்பட்டு வந்த எங்கள் மகள் அதிக ரத்தப்போக்கு காரணமாக மறுநாள் அதிகாலை இறந்துவிட்டார். இது குறித்து வெளியே கூறினால் வீட்டை எரிந்துவிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான சமரிந்திர கயாலின் மற்றும் அவரது மகன் பராஜ்கோபால் எங்களை மிரட்டினர். எனவே மிரட்டலுக்கு பயந்து, உயிரிழந்த எங்கள் மகளை தகனம் செய்துவிட்டோம் என அந்த சிறுமியின் பெற்றோர் கூறினர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் மேற்குவங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மகன் பராஜ்கோபால் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அதில், பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது, என சிபிஐ தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான போதையில் இருந்த மூன்று பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அந்த சிறுமியை வீட்டில் கெண்டுவந்து விட்டுள்ளனர். சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை அருகில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்துள்ளனர். இதனால், சிறுமியின் உடலை பரிசோதனை செய்யமுடியவில்லை.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அவரது பெற்றோர் சிறுமியை‌ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் ஒன்பது பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த 9 பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிபிஐ விசாரணையில் அந்த குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியந்துள்ளது.

Baskar

Next Post

இலங்கையில் உச்சக்கட்ட பரபரப்பு... அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..

Sat Jul 9 , 2022
வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இதனால் இலங்கை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவிவிலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் […]

You May Like