இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு 2 வகையான பெயர்கள் இருப்பது சகஜமான விஷயம்தான்.
உதாரணமாக, கர்நாடக மாநிலத்திற்கு கர்நாடகம் என்றும் ஆந்திர மாநிலத்திற்கு தெலுங்கு தேசம் எனவும் பல்வேறு பெயர்கள் இருக்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகம் என்ற ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது.
தமிழகத்தின் ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும் தற்போதைய ஆளும்தரப்பான திமுகவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றனர். பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஆளுநர் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநரின் உரையின்போது தமிழக அரசின் சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்ட அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்து விட்டார்.
அவருடைய இந்த செயல் சட்டசபையில் சலசலப்பை உண்டாக்கிய நிலையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார் அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போது ஆளுநர் பேரவையிலிருந்து திடீரென்று வெளியேறினார்.
இந்த சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள புகார் கடிதத்தை குடியரசு தலைவரிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி ஆர் பாலு உள்ளிட்டோர் வழங்கினர் அதில் ஆளுநர் தன்னுடைய வரம்பை மீறி செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் கடிதத்தை நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசு தலைவர் அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு நடுவே சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் திடீரென்று டெல்லிக்கு பயணமானார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அரசு சார்ந்த எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு யாரையும் சந்திக்கவும் இல்லை, தன்னுடைய உறவினர் திருமணத்தில் பங்கேற்றுக் கொண்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஆளுநர் ரவி சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலமாக மீண்டும் டெல்லிக்கு பயணமானார்.
தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் சந்திக்க இருப்பதாகவும், அப்போது தமிழக விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட புகாரை அடுத்து ஒரே வாரத்தில் 2வது முறையாக ஆளுநர் டெல்லிக்கு செல்வது கவனிக்கத்தக்க நிகழ்வாக மாறியிருக்கிறது.