மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் நலசோபரா பகுதியைச் சேர்ந்தவர் பிரபு விஷ்வகர்மா (26) இவருடைய மனைவி அனிதா இந்த தம்பதிகளுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மனைவி அனிதாவின் நடவடிக்கையின் மீது கணவர் பிரபுவுக்கு சந்தேகம் இருந்துள்ளது.
இது குறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் சண்டைகளும் ஏற்பட்டு வந்திருக்கின்றன ஆகவே நேற்று முன்தினம் காலை இருவருக்கும் இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு அதிகரிக்கவே அதன் பிறகு கோபமடைந்த அனிதாவின் கணவர் பிரபு முகத்தை மூடி கழுத்தை நெரித்து தன்னுடைய மனைவியை கொலை செய்திருக்கிறார்.
இந்த கொடூரமான கொலையை செய்துவிட்டு அதன் பிறகு எதுவும் நடக்காததை போல தன்னுடைய வேலைக்காக வெளியே சென்று விட்டார். அதன் பிறகு பணியை முடித்துவிட்டு மாலை காவல் நிலையத்தில் சென்று தான் கொலை செய்து விட்டதாக சரணடைந்து விட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் கேள்வி எழுப்பிய போது தன்னுடைய மனைவியை காலை கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் வீட்டிற்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கணவர் பிரபு மீது கொலை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையிலடைத்திருக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.