திருச்சி சுப்பிரமணியபுரம் கென்னடி தெருவை சேர்ந்தவர் முகமது பாபு என்கின்ற கண்ணன் (40) வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி சமீபா பேகம் (34) இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே சமீபா பேகம் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். முகமது பாபு அவ்வபோது அவர்கள் வீட்டிற்கு வந்து நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என்று அழைப்பு விடுத்து செல்வார் என்று கூறப்படுகிறது.
அதேபோல நேற்று இரவு முகமது பாபு வீட்டிற்கு வந்த போது கணவன், மனைவிக்கிடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் கொண்ட முகமது பாபு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சமீப பேகத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் தலை கழுத்து போன்ற பகுதிகளில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சமீப பேகத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மீட்பு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அடைந்த கேகே நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறை சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து முகமது பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.