தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயலின் காரணமாக, ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு அவ்வப்போது அமைச்சர்கள் அதிகாரிகள் என்று பலரும் தமிழக முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் சென்ற வருடங்களில் மழை காலங்களில் இருந்த தொந்தரவு எதுவும் தற்போதில்லை என்று சொல்லப்பட்டாலும் கூட, ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கத்தான் செய்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகிறார்கள்.
மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடையில் புதுவை சீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்று இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் சென்னைக்கு வரும் புதுவை பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் ஈசிஆர் சாலை மூலமாக சென்னைக்கு வரும் புதுவை பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.