நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இது போன்ற அத்துமிரல்களை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இது போன்ற தவறுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனவே தவிர, அந்த சட்டங்களுக்கு பயந்து இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடாமல் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது.
ஆயிரம் சட்டங்களை போட்டாலும் அதையும் மீறி இப்படி தவறு செய்யும் நபர்களை தண்டிப்பதற்கு என்ன தான் வழி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.தஞ்சை மாவட்டம் மேலட்டூர் அருகே ஏறவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62) இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகின்றார் இந்த சூழ்நிலையில், இவருடைய கடைக்கு ஒரு 9ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 2021 ஆம் வருடம் பலகாரம் வாங்குவதற்காக வருகை தந்துள்ளார்.
அப்போது அந்த கடையை நடத்தி வந்த நாகராஜன் பலகாரம் வாங்க வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு இந்த விவகாரத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்த அந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அதன் அடிப்படையில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நாகராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தர்ராஜன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜனுக்கு 25 ஆயிரம் அபராதமும் 25 ஆண்டு கால சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அபராதத்தை கட்ட தவறிவிட்டால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.