தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சம்பவங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணம் என்று ஆகிவிட்டது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாதவரம் அடுத்துள்ள மாத்தூர் 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லேத் பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மணலியை சார்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அந்த பகுதியில் தன்னுடைய லாரியை நிறுத்தி வைத்திருக்கிறார், இந்த நிலையில் அவர் வண்டியை எடுப்பதற்காக சென்று பார்த்தபோது லாரியின் அருகே திருநங்கை ஒருவர் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.
மேலும் 2 கைகள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் ரத்த காயங்களுடன் அந்த திருநங்கை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த லாரி டிரைவர், மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் திருநங்கை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் விசாரணையில் மாதவரம் பகுதியில் உயிரிழந்த கிடந்தது திருநங்கை சனா(29) என்றும் இவர் எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ தெரு அருகே உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
அந்த திருநங்கையை மர்ம நபர்கள் இரவு சமயத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து திருநங்கைகளை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.