விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(68), ரங்கநாயகி(65) தம்பதிகள். இந்த தம்பதிகளுக்கு சுப்பிரமணியன்(40) சக்திவேல் (35) மாரிமுத்து(32) என்ற 3 மகன்களும், மீனாட்சி (37) என்ற மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் மாரிமுத்துவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதில் மூத்த மகனான சுப்பிரமணியன் கூலி வேலை பார்த்து வருகின்றார். இத்தகைய நிலையில், சமீபகாலமாக அவர் மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். சுப்பிரமணியன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனைப் பார்த்த அவருடைய தந்தை பாலகிருஷ்ணன் காலையிலேயே மது குடித்துவிட்டு வந்தால் குடும்பத்தை எப்படி கவனிப்பது? என்று தன்னுடைய மகன் சுப்ரமணியனை கண்டித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, மதுபோதையில் இருந்த சுப்பிரமணியன் கடுமையான ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த டிவி மற்றும் சமையல் அடுப்புகளை சேதப்படுத்தி இருக்கிறார்.
ஆகவே கோபமடைந்த தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியனை அடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் போதையில் இருந்த சுப்பிரமணியன் ஆத்திரமடைந்து காய்கறி வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து தந்தையின் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதன் காரணமாக, பயந்து போன தந்தை பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தும் சுப்பிரமணியன் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று அவருடைய மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு, சுப்பிரமணியனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.