கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் தான், சுபாலெட்சுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், மதுவுக்கு அடிமையான ஐயப்பன், வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது.
இதில் ஐயப்பனும், சுபாலட்சுமியும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான், வீட்டில் குழந்தை தொடர்ந்து, அழுது கொண்டே இருந்ததால், அக்கம்பாக்கத்தில் இருந்தவர்கள், அங்கு சென்று பார்த்தபோது, சுபாலெட்சுமி சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கே சுபாலெட்சுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய காவல்துறையினர், சுபாலெட்சுமியின் மரணம் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கு நடுவே, மருத்துவமனை எதிரே ஒன்று திரண்ட சுபாலெட்சுமியின் உறவினர்கள், முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். தங்களுடைய மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. ஆகவே, சுபாலெட்சுமியை அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், சாதி பெயரைச் சொல்லி பலமுறை திட்டியதாக சொல்லப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், கணவரும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் திட்டி, கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அந்தப் பெண்ணின் கணவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் குதித்த பெண் வீட்டாரால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.