மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து ரேவா போலீசார் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
இதில் விமானம் பலத்த சேதமடைந்த நிலையில், விமானி உயிரிழந்தார். பயிற்சி மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த விமானியின் பெயர் விஷால் யாதவ் என்பதும், காயமடைந்த பயிற்சி விமானியின் பெயர் அன்ஷுல் யாதவ் என தெரியவந்துள்ளது. ரேவா மாவட்ட ஆட்சியர் மனோஜ் புஷ்ப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு நன்வ்நீத் பாசின் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்துக்கான காரணங்கள் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.