மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்திருந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அவரை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் நிர்மலா சீதாரமனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தமுறை செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்ததே தனக்கு தெரியாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்துள்ளார். கட்சி தலைமைக்கே தெரியாமல் நிகழும் அவரின் சந்திப்பு கட்சி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.