உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிக்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேற்று நீதிபதி அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. செந்தில்பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பாக, விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம், அதற்கு இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றவுடனேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. ஆகவே அதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இது போல பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறியதுடன், 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிக்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
அண்ணாமலை அறிக்கை
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைப்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடினார். பின்னர், ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், செந்தில் பாலாஜி இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜாமீன் கிடைப்பதற்காக பொய் சொல்லி, உச்ச நீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள செந்தில்பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.