கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனக்கு திருமணத்திற்கு பெண்பார்க்க சொல்லி தனது தாயிடம் வற்புறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு, ஊர் சுற்றி திரியும் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்று கூறி மறுத்த தாயை, கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார் அந்த இளைஞர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலப்புர்க்கி மாவட்டத்தில் உள்ள சிஞ்சோலி தாலுகாவில் இருக்கும் பூச்சாவரம் என்னும் கிராமத்தில் தாய் ஷோபா அஞ்சப்பா பாகேரி (45) தனது மகன் அனில் (25) என்பவருடன் வசித்து வந்தார். அனில் தினமும் வேலைக்கு செல்லாமல், மது அருந்துவிட்டு சுற்றி திரிந்திருக்கிறார். மது வாங்குவதற்கு அவரது தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனக்கு உடனடியாக திருமணத்திற்கு பெண் பார்க்க சொல்லி அவர் தனது தாயை வற்புறுத்தி இருக்கிறார். வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி திரியும் அவருக்கு, பெண் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்று அவரது தாய் கூறியிருக்கிறார்.
அப்பொழுது மது போதையில் இருந்த அனில், தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது தாயைத் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குஞ்சாவரம் காவல் நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த ஷோபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது தாயை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய அனிலை தேடி வருகின்றனர். ஒரு மகனே தாயை அடித்துக் கொன்ற இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.