திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாயிடம் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை, அவருடைய மகன் அரிவாள் மனையால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் லோகநாதன், கீதா இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன் ஒரு மகள் என நான்கு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக லோகநாதன், கீதா தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அதன்படி லோகநாதன் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். எதற்கு நடுவே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செல்போனில் தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்ட லோகநாதன், மதுபோதையில் அவரிடம் தகாத வார்த்தைகளில் பேசி அவரை திட்டியதாக சொல்லப்படுகிறது. அதோடு, கோவையிலிருந்து பணப்பாளையத்தில் தங்கி இருக்கும் தன்னுடைய மனைவியின் வீட்டிற்கு வந்த லோகநாதன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த அவர்களுடைய மூத்த மகனான சங்கர், தன்னுடைய தந்தை லோகநாதன், தாயை தரக்குறைவாக பேசுவதை பார்த்து ஆத்திரம் கொண்டார். ஆகவே அருகில் இருந்த அரிவாள் மனையை எடுத்து வந்து, தந்தையின் தலையில் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.
இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், அருகில் இருந்தவர்களால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தந்தையை அரிவாள்மனையால் வெட்டிய மகன் ஷங்கரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.