கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், விவாகரத்து கோரி சித்தரவதை செய்வதாக ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில்.. “எனக்கும், கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. எனது பெற்றோர் 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் மற்றும் பொருட்களை திருமண வரதட்சணையாக கொடுத்தனர்.
திருமணத்திற்கு முன்பு வரை ஆசையாக பேசிய கணவன், திருமணமான பிறகு ‘நீ கருப்பாய் இருக்கிறாய், அதனால் நீ எனக்கு பொருத்தமில்லை, எனவே விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அத்துடன் அவருடைய தாயார் ராஜேஸ்வரி, தந்தை தண்டபாணி ஆகியோரும் தொடர்ந்து தகாத வார்த்தைகளில் திட்டி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்ரனர். விவாகரத்து செய்ய நான் சம்மதிக்கவில்லை. இதனால் கணவர் மற்றும் அவரது பெற்றோர் என்னை தாக்கி சித்ரவதை செய்து, வீட்டை விட்டு துரத்திவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு கணவர் கார்த்திகேயன், பெற்றோர் ராஜேஸ்வரி, தண்டபாணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக பெற்றுக்கொண்டு நிறத்தை காட்டி பெண்ணை விவாகரத்து கேட்டு சித்ரவதை செய்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; இயற்பியலுக்கான நோபல் பரிசு இரண்டு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!!