காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வரும் டில்லி ராணியை பட்டப்பகலில் அவரது கணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. இவர் பணி முடிந்த பிறகு தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு வலது கை பகுதியில் இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. வெட்டிய நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பெண் போலீஸை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே, சீருடையில் இருந்த பெண் காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், விசாரணயை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவரே அரிவாளால் வெட்டியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பருத்திகுளம் பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் டில்லி ராணிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 6 மாத காலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்களாம். இந்நிலையில் தான், இன்று மதியம் மேகநாதன் வழிமறித்து டில்லி ராணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் டில்லி ராணியை வெட்டியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த டில்லி ராணி அங்கேகேயே சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, மேகநாதன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், சந்தேகத்தின் பேரில் மேகநாதனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : மூட நம்பிக்கையால் பிஞ்சு குழந்தையை கொலை செய்த தாத்தா..!! விசாரணையில் பகீர் தகவல்..!!