பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு, தலைமறைவான பெண்ணால், நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, நீலகிரி பகுதியில் இருக்கின்ற பந்தலூர் அருகே இந்திரா நகர் என்ற பகுதியில் டாஸ்மாக் ஊழியராக ரவி என்ற நபர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ரவி வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது, அவருடைய வீட்டிற்கு வந்த ஒரு பெண், அவருடைய மகளிடம் என்னுடைய மூத்த குழந்தை வண்டலூர் பேருந்து நிலையத்தில், மயங்கி விழுந்து விட்டது.
ஆகவே, இந்த பச்சிளம் குழந்தையை சற்று நேரம் வைத்திருங்கள் என்று தெரிவித்துவிட்டு, ரவியின் மகளிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு, சென்று விட்டார். ஆனால், வெகு நேரம் ஆன பின்னரும், அந்த பெண்மணி திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, இது தொடர்பாக தேவாலா காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். ஆகவே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த குழந்தை பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை என்று தெரியவந்துள்ளது. அந்த குழந்தையை தூக்கி வந்த பெண் ரவியின் மகளிடம் ஒப்படைத்துவிட்டு, சென்றுவிட்டார் என்ற விவரமும் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலமாக, ஊட்டி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை அனுமதித்திருக்கிறார்கள். அந்த குழந்தை யாருடையது? அந்த பெண், குழந்தையை கடத்திக் கொண்டு வந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நீலகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.