காதலிக்க மறுத்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்த இளைஞன் 6 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், நெல்யாஹுடிகேரியைச் சேர்ந்தவர் அஷ்ரப் மகன் அப்ரித் (21). இவர் அதே ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அப்ரித்தின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து, தன்னை காதலிக்குமாறு இளம்பெண்ணை அப்ரித் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வேலைக்காக அப்ரித் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்தார். அங்கிருந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அப்ரித், தன்னைக் காதலிக்காவிட்டால், உன் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால், அவரின் மிரட்டலுக்கு அந்த அந்த பெண் அடி பணியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்ரித், அந்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் கசிய விட்டார். இந்த விஷயம் தெரிந்ததும், அந்த இளம்பெண் 2023 டிசம்பரில் சித்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, வெளிநாட்டில் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்ரிதை சித்தாப்பூர் போலீஸார் மும்பை விமான நிலையத்தில் நேற்று கைது செய்தனர்.