தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில், குடிமகன்களின் எண்ணிக்கை மேன்மேலும், அதிகரித்து வருகிறது. எப்படியாவது இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அவர்களால் அந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு இந்த குடி பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக இருப்பார்கள்.
மேலும், சிலர் போதைக்காக சில வித்தியாசமான முறைகளை கையாள்வதுண்டு. அப்படி வித்தியாசமான முறையை கையாண்ட, இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கும்பகோணம் காவிரி ஆற்றங்கரையில் நண்பர்களான பாலகுரு மற்றும் சௌந்தரராஜன் உள்ளிட்ட இருவரும் நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து, மது அருந்தி உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள், சுமை தூக்கும் தொழிலை செய்து வருவதால், அன்றாடம் உடல் வலியை போக்குவதற்காக மது அருந்துவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது, வாங்கி வந்த மது சரியான போதை ஏறவில்லை என்று தெரிவித்து, அவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த கிருமி நாசினியை மதுவில் கலந்து குடித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஆற்றங்கரைக்கு சென்ற பொதுமக்கள், அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது பற்றி, காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதோடு, அவர்கள் உயிரிழந்து கிடந்த இடத்திற்கு அருகே, கிருமி நாசினி பாட்டில்களும் கிடந்துள்ளது. அதோடு, பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்து கிடந்த இருவரின் உடலையும், கைப்பற்றி ,பிரேத பரிசோதனைக்காக, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே நேரம், அவர்கள் இருவரும் உயிரிழந்ததற்கு காரணம், அவர்கள் இரண்டு பேரும் மதுவில், கிருமி நாசினியை கலந்து குடித்தது தானா? அல்லது ஏதாவது போலி மதுபானத்தை குடித்து உயிரிழந்தார்களா? அல்லது வேறு யாராவது அவர்களை கொலை செய்துவிட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.