தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு..
* 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இதனை அமைக்க 30 சதவீத மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்புத் தொகுப்புக்காக ரூ.102 கோடி ஒதுக்கீடு.
* நெல் விதை மானியத்திற்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு.
* மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் – மானியம் வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
* நிலமற்ற விவசாயிகளுக்கு விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
* பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.