சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், 4 பெண்கள் உள்பட 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்ரீவீரர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 8 அறைகள் இடிந்து தரை மட்டமாகின.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகன் ராஜ் மற்றும் போர்மேன் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.