தோசை என்பது தென்னிந்திய பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மிகவும் விருப்பமான உணவாகும். தற்போது இந்த தோசை என்பது பல்வேறு அவதாரம் எடுத்து புதுப்புது வடிவில் வந்துவிட்டது.
நீர் தோசை
இந்த நீர் தோசையை செய்வதற்கு தோசை மாவின் பதம் சற்றே நீர்க்க இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நன்றாக ஊற வைத்த அரிசி உடன், தேங்காய் துருவல், உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, நன்றாக அரைத்து, மாவை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை நன்றாக புளித்தவுடன் மட்டுமே தோசை சுட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரிசியை ஊற வைத்தால், போதும். பத்து நிமிடங்களில் தோசையை செய்துவிடலாம். இதை காரமான பூண்டு சட்னி, மிளகாய் சட்னி அல்லது அசைவ குழம்புடன் சேர்த்து பரிமாறுவது நன்றாக இருக்கும்.
சீஸ் தோசை
ஒருவருக்கு பீட்சா அல்லது சீஸ் போன்றவை பிரியமான உணவு என்றால், இந்த தோசையை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். தங்களிடம் இருக்கும் இந்த சீஸ் வகைகளையும் இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். தோசையின் மீது, துருவிய சீஸ் மற்றும் ஹெர்ப்ஸ் போன்றவற்றை சேர்த்து, சீஸ் உருகும் வரையில் வேக வைத்து, பரிமாறினால், நன்றாக இருக்கும். நீங்கள் விரும்பும் பட்சத்தில், தோசையின் மீது சாஸ் அல்லது சட்னி உள்ளிட்டவற்றை தடவி அதன் பிறகு சீஸ் துருவலை சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா தோசை
நாம் நாம் சாதாரணமாக செய்யும் பிளைன் தோசைக்கு பதிலாக, இந்த மசாலா தோசையை முயற்சி செய்து பார்க்கலாம். முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், இஞ்சி மற்றும் கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். இத்துடன், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம் உள்ளிட்டவற்றை சேர்த்து, வதக்கிக் கொள்ளலாம். அதோடு, மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, மசாலா தயார் செய்து கொண்டு, இதை தோசையின் நடுவே வைத்து, நெய் ஊற்ற வேண்டும். தற்போது நன்றாக டேஸ்டான மசாலா தோசை தயாராகிவிடும்.
முட்டை தோசை
இந்த முட்டை தோசையை இரண்டு விதத்தில், நாம் செய்து பார்க்கலாம். முட்டையை புர்ஜியாக செய்து தோசையின் நடுவே வைத்து முக்கோண வடிவில் மடக்கி, பரிமாறலாம். அல்லது தோசை ஊற்றிய பிறகு அதன் மேல், முட்டையை உடைத்து ஊற்றி, மிளகு சீரகப் பொடியை தூவி, முட்டை தோசையாகவும் செய்து பரிமாறலாம். இதில் அசைவ குழம்பு அல்லது மட்டன் சிக்கன் போன்ற தொண்டுகளை சேர்த்து கறி தோசை ஆகவும் சாப்பிடலாம்.
கோதுமை தோசை
ஒரு முழு கோதுமையை உளுந்துடன் சேர்த்து, ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, தோசை மாவை அரைத்து தோசை செய்யலாம் அல்லது ஏற்கனவே கடைகளில் கிடைக்க கூடிய கோதுமை மாவுடன், சிறிதளவு அரிசி மாவு, சீரகம், மிளகுப்பொடி, பெருங்காயம் மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, கரைத்து தோசையாக ஊற்றலாம் என்று கூறப்படுகிறது.
ஓட்ஸ் தோசை
உடல் எடையை குறைப்பதற்கு விரும்புபவர்களாக இருந்தால், இந்த தோசையை நீங்கள் செய்து சாப்பிடலாம். இந்த தோசை மாவை புளிக்க வைத்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஓட்ஸுடன் நீங்கள் விருப்பப்படும் பருப்புகளை சேர்த்து, அரைத்து ஓட்ஸ் தோசையாக செய்து சாப்பிடலாம்.
பச்சைபயிறு தோசை
இந்த தோசை செய்வது மிகவும் எளிதான காரியம் என்று கூறப்படுகிறது. அதாவது, நன்றாக ஊற வைத்த பச்சை பயிறு இல்லை என்றால், முளைகட்டிய பச்சை பயிருடன், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து, அரைத்து உடனடியாக தோசை ஊற்றி, அதன் பிறகு சாப்பிடலாம். நீங்கள் காலை வேளையில், தோசை செய்வதாக இருந்தால், அதற்கு முந்தைய நாள் இரவே, பச்சைப்பயிரை ஊற வைத்துக் கொள்வது நல்லது.