குளியல் அறையில், நீராடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய சகோதரர்கள், காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதாவது, மதுரை பெருங்குடி கணபதி நகர் 3வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர்கள் முத்துராஜா(30), அங்குகுமார்(32) சகோதரர்களான இவர்கள் இருவரும், பெண்கள் தனியாக நீராடிக் கொண்டிருக்கும் போதும், அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல், மறைமுகமாக, வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்துள்ளனர். அதன் பிறகு, அந்த வீடியோவை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிப்பதை இவர்கள் வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில்தான், தெப்பக்குளம் பகுதியில் இருக்கின்ற ஒரு உறவினரின் வீட்டில் நடந்த ஒரு விசேஷத்தில் பங்கேற்றுக் கொள்வதற்காக, அவர்கள் இருவரும் சென்று உள்ளனர். அங்கே ஒரு கல்லூரி மாணவி குளியலறையில் நீராடிக் கொண்டிருந்தபோது, அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்ததால், அந்த மாணவி அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவியை மிரட்டி, அவரிடம், பணம் பறிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், பணம் தர மறுத்துவிட்டார் அந்த மாணவி. மேலும், பணம் தர மறுத்தால், சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று, அந்த மாணவியை மிரட்டி உள்ளனர் அந்த சகோதரர்கள்.
இதனால் அதிர்ந்து போன அந்த கல்லூரி மாணவி, இந்த விவகாரம் தொடர்பாக, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆகவே அவர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில், இது தொடர்பாக புகார் வழங்கியிருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முத்துராஜா, அங்குகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் பல பெண்களை வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து மிரட்டி, பணம் பறித்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.