”நீட் விலக்கு மசோதா மீதான மத்திய அரசின் முடிவு குறித்து கால நிர்ணயம் செய்ய முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அப்படியெனில், எப்போது அனுப்பப்பட்டது? அதன் மீதான மத்திய அரசு நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, ”கடந்த 02.05.2022 அன்று தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதா மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்றது. அதனைத் தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதில் கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்த ஒரு மசோதாக்கள் மீதான ஆலோசனைக்கும் நேரம் எடுக்கும் என்பதால், நீட் மசோதா மீதான மத்திய அரசின் முடிவு குறித்து கால நிர்ணயம் செய்ய முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.