தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது. தொடர்ந்து சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது..
எனினும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பெரும்பான்மை இடம் கிடைக்காததால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. குறிப்பாக அமுமக எம்.எல்.ஏவை கடத்தி ஆதரவு கடிதம் பெற்றதாகவும், குதிரை பேர அரசியல் நடத்தியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி இருந்தார்..
மறுபுறம் தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக இபிஎஸ் அணி, சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது..எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..
ராஜினாமா செய்த கையோடு மூவரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. விஜய் தலைமையிலான தவெக தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக காட்டமாக விமர்சித்திருந்தது. மேலும் திமுகவும் குதிரை பேர அரசியலை கடுமையாக சாடியிருந்தது..
இந்த நிலையில் தவெகவின் குதிரை பேர அரசியலை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது.
அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது.
தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : கேவலமான அரசியலை திசைதிருப்பவே விவசாய கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை.. விஜய் அரசை சாடிய இபிஎஸ்..!



