தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்த நிலையில், கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து, அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் ரகசிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் மிக முக்கியமானதாக, அதிமுகவின் 34 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஆதரவுக் கடிதங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதரவு நகர்வு ஜோசப் விஜய் தலைமையிலான கட்சியை நோக்கி செல்லும் வகையில் அமைந்துள்ளதாகவும், சட்டரீதியான சிக்கல்களை தவிர்க்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நகர்வுகளை கட்டுப்படுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சி.வி.சண்முகம் தரப்பு கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், தேர்தல் தோல்விக்கு தலைமையே காரணம் என நேரடியாக குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
Read more: பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கும் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!



