ராகுல் காந்தி மீதான சொத்து குவிப்பு வழக்கு!. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை!. உச்சநீதிமன்றம் அதிரடி!

Supreme Court slams Rahul Gandhi 2025 04 370fd0b1399a256bfca3add03e3361f3 3x2 1

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்களன்று விசாரித்தது. விசாரணையின் போது, சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது வேறு எந்த அதிகார அமைப்பும் உயர் நீதிமன்றத்திற்கு எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 20-ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த விசாரணையை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தினர்.

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் “சட்டத்திற்கு முற்றிலும் அறிமுகமில்லாத” ஒரு செயல்முறையைக் கையாண்டதாக வாதிட்டார். மேலும், ராகுல் காந்தியின் விளக்கத்தை கோராமலேயே, மனுதாரரான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் விக்னேஷ் ஷிஷிரின் பின்னணியை கேள்விக்குட்படுத்தாமல், ஒரு பழிவாங்கும் நடவடிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ஏஜென்சிகள் இன்னும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றும், புகாரை மட்டுமே சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்தார். சிபிஐ என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், அதுகுறித்து தங்களுக்கு கவலையில்லை என கபில் சிபல் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி பாக்சி, குற்றச்சாட்டுகள் அவ்வளவு தீவிரமானது என்றால், விசாரணை அமைப்புகள் ஏன் இதுவரை அமைதியாக இருந்தன? நீங்களே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் புரிந்துகொண்டிருப்போம். விசாரிக்க உங்களுக்கு ஏன் உயர் நீதிமன்றத்தின் தூண்டுதல் தேவைப்பட்டது? என விசாரணை அமைப்புகளை நோக்கி கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறும்போது, “சட்டம் குறித்த எங்கள் புரிதலின்படி, எந்தவொரு புலனாய்வு அமைப்பிடமும் முகாந்திரம் இருந்தால், அவர்கள் தாமாகவே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம், அதற்கு குற்றம் சாட்டப்பட்டவரின் அனுமதி தேவையில்லை. ஆனால் ஒரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க விரும்பினால், அது இயற்கை நீதியின் கோட்பாடுகளைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார். மேலும் உத்தரவு பிறப்பிக்கும் முன் இரு தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நேரடியாக காணொளி வாயிலாக ஆஜரான மனுதாரர் விக்னேஷ் ஷிஷிர், உயர் நீதிமன்றத்தின் நடைமுறையை ஆதரித்து வாதிட்டார். வழக்கு ஆரம்பகட்ட விசாரணையில்தான் உள்ளது என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தன் தரப்பை கூற முடியாது என அவர் தெரிவித்தார். எனினும், இந்த விவகாரத்தில் விக்னேஷ் ஷிஷிர், சிபிஐ, அமலாக்கத்துறை, உத்தரப் பிரதேச காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

1newsnationuser5

Next Post

கள்ளக்காதல் விவகாரத்தில் விபரீதம்.. தோட்டத்தில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை! 19 வயது இளைஞர் கைது..

Tue Aug 18 , 2026
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக உருவான பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது. தோட்டத்தில் தங்கியிருந்த கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரான 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராமச்சந்திரன் (45) என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஏற்கெனவே நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள […]
51f6cd2e7146d70961bb0ed1c5335d54

You May Like