தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவை சிங்காநல்லூர் தொகுதியில் பேசிய அவர்; தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை தொழில் நிறுவனத்தினர் வேறு மாநிலத்துக்கு செல்கின்றனர். கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை.
அதிமுக ஆட்சியில் கோவையில் தொழில் வளம் சிறப்பாக இருந்தது. 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணியாற்றினர். தற்போது ஒரு ஷிப்ட்டில் மட்டும்தான் பணியாற்றுகின்றனர். அதிமுக ஆட்சியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு பணிகள் முடிவு பெறும் நிலையில், திமுக ஆட்சியில் திட்டம் முடங்கிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் விமான நிலைய விரிவாக்கப்பணி முடிக்கப்படும்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கியநிலையில், அத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பது தான் திமுக அரசின் சாதனை என்றார்.