தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய், முக்கியமான பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். புதிய அமைச்சரவை அமைப்பில் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முன்னிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தது. இதையடுத்து ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜயுடன் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சர்களுக்கான துறைகள் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை, என். ஆனந்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை, நிர்மல்குமாருக்கு மின்சாரத்துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், ஆதவ் அர்ஜூனாவுக்கு விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை, ராஜ்மோகனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, முஸ்தபாவுக்கு சிறுபான்மையினர் நலத்துறை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அருண்ராஜுக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை, வெங்கட்ராமனுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கும் அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை போன்ற முக்கிய துறைகளை விஜய் தன் வசம் வைத்துக் கொண்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. ஆட்சியின் ஆரம்பத்திலேயே நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு மீது நேரடி கட்டுப்பாட்டை செலுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள விஜய் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த நாட்களில் அமைச்சர்களுக்கான முழுமையான துறை ஒதுக்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



