பொய்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்…! திமுக நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இபிஎஸ்…!

eps

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூ சுற்றி வரும் திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு, சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி முதல்வர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு லட்சக் கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

2022 மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, ஜாலூ மால் 3,500 கோடி ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6 100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள். இதன்படி ஆறு நிறுவனங்களும் தொழிலை ஆரம்பித்து விட்டனவா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன?- யாருக்கும் தெரியாது.

இரண்டாவதாக, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு 3,233 கோடி ரூபாய் முதலீடு பெற்று, 5000 வேலைவாய்ப்பை உருவாக்கப் போட்ட 13 ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது ? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? யாருக்கும் தெரியாது. மூன்றாவதாக, ஸ்பெயினுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 வரை சென்று 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தோம் என்றும் கூறினார்கள். அந்த முதலீட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? யாருக்கும் தெரியாது.

4-ம் முறையாக 2024, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை 17 நாட்கள் அமெரிக்காவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7.618 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? யாருக்கும் தெரியாது. தற்போது ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம் இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.

இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து 27 தொழிற்சாலைகள் தொடங்கி 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.

தொழில் துறை அமைச்சரோ, 2025, மே மாதம் 12-ஆம் தேதி தனது அறிக்கையில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 547 கோடி ரூபாய்க்கு முதலிட்டை ஈர்த்து, 32.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 70% முதலீட்டைப் பெற்றுவிட்டதாகக் கூறினார். கடைசியாக ஸ்டாலின் 30.8 2025 அன்று வெளிநாடு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை சேர்த்து, 32.81 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 77 சதவீதம் செயல்முறைப்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளிநாட்டு மூலதனம் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23-ல் தமிழ் நாடு பெற்ற அத்திய முதலீடு வெறும் 17,247 கோடி ரூபாய் என்றும், 2023-24ல் 20,157 கோடி ரூபாய் என்றும் 2024-25-ல் 31,103 கோடி ரூபாய் தான் என்றும். ஆகமொத்தம் 3 ஆண்டுகளில் 2025 மார்ச் மாதம் வரை 68,507 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகப் பெற்று ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது.தமிழ் நாட்டை விட பல மடங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜாரத் போன்ற மாநிலங்கள் எல்லாம் பெற்றுள்ளன. டெல்லியும், தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ் நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?

ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது? எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்? எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன? எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன? என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ்நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு எக்ஸ் தனி வலைதளத்தில் தொழில்துறை அமைச்சரும், முதல்வரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது இந்த அரசு ஒரு பொய் பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.

பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

'நேபாள வன்முறை மனதை உடைக்கிறது; எங்களுக்கு அமைதி முக்கியம்'!. பிரதமர் மோடி வேண்டுகோள்!.

Wed Sep 10 , 2025
நேபாளத்தின் நிலைமை குறித்து விவாதிக்க இந்திய அரசு செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து, நேபாள வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் […]
PM Modi on Emergency 1

You May Like