டாஸ்மாக் மூலம் நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செங்கோட்டில் பேசிய அவர்; கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்சினை உருவாக்கப்பட்டதாக தகவல். அதிமுகவைப் பொறுத்தவரை எந்த இடத்தில் கூட்டம் போட்டாலும் வெற்றிக் கூட்டமாக இருக்கும். பொதுமக்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். 168 தொகுதிக்கு நேரடியாகச் சென்று எழுச்சி பயணக் கூட்டத்தை மேற்கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, இன்று இங்கு கூட்டம் நடக்கிறது.
மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. இன்று கூட செய்திகளில் பார்த்தேன்… இனிமேல் ஆஸ்பத்திரியில் பயனாளிகள் என்று சொல்ல வேண்டுமாம், நோயாளி என்று சொல்லக் கூடாது. பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம்? எல்லாவற்றுக்கு பெயர் மாற்றம், இரண்டாவது பெயர் வைப்பார், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. போட்டோ ஷூட்டோடு எல்லாம் முடிந்துபோகும்.
கோவையில் பாலம் திறக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே 10 கிலோ மீட்டர் நீளமான பாலம். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் 55% நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று கிடப்பில் போட்டு, இப்போது அவர் திறக்கிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார், நல்ல பெயர் வைங்க, உங்க அப்பா பெயர் மட்டும் வைக்காதீர்கள். எங்க பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார். கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நிதி ஒதுக்கியது அதிமுக அரசு, ஆனால் பேர் வைப்பது மட்டும் அவர். நல்லவேளையாக நாளை திறக்கப்போகும் பாலத்துக்கு அவர் அப்பா பெயர் வைக்காமல் நல்ல பெயர் வைத்திருக்கிறார், வாழ்த்துகள்.
10 ரூபாய் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு ரூ.5,400 கோடியுமாக இந்த நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இவற்றை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



