ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில், 28 வயதான பெண் ஆய்வக ஊழியர் ஒருவர் விசித்திரமான தீவிர நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எதிர்ப்பு பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில்’ (Anti-Plague Research Institute) பணியாற்றி வந்த அப்பெண், ஆபத்தான நோய்க்கிருமி கசிவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இர்குட்ஸ்க் அருகே உள்ள ஷெலெகவ் (Shelekhov) நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அப்பெண், உயிரிழப்பதற்கு முன் தான் பணியாற்றிய போது நேரடி உயிரியல் மாதிரிகள் (live biological material) அடங்கிய சோதனைக் குழாய் ஒன்றை தற்செயலாக உடைத்துவிட்டதாக மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர், அவருக்கு “காரணம் கண்டறியப்படாத” தீவிர நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்ததை அடுத்து, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 1) உயிரிழந்தார்.
அப்பெண் ‘நுரையீரல் பிளேக்’ (Pneumonic Plague) நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்களில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளேக் நோய் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்பதை ரஷ்ய அதிகாரப்பூர்வ அமைப்புகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
197 பேர் மருத்துவக் கண்காணிப்பில் தீவிர தனிமை:
பாதிக்கப்பட்ட ஆய்வக ஊழியருடன் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் 197 பேர் உடனடியாக மருத்துவக் கண்காணிப்பிலும், தனிமைப்படுத்தலிலும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வார்டுகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷெலெகவ் மாவட்ட மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பிரசவ வார்டு பகுதியிலும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பான ‘ரோஸ்போட்ரெப்நாட்சர்’ (Rospotrebnadzor), இர்குட்ஸ்க் பகுதியில் தொற்றுநோயியல் நிலைமை தற்போதைக்கு கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் யாருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை என்றும், அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் ‘நெகட்டிவ்’ ஆக வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பிளேக் அச்சம் ஏன்?
அப்பெண் வேலை செய்த இடம் பிளேக் ஆராய்ச்சி நிறுவனம் என்பதாலும், நேரடி உயிரியல் கிருமி மாதிரி உடைந்ததாலும் இந்தச் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில ஊடகங்கள் இந்தத் தொற்றை பிளேக் நோயை உண்டாக்கும் ‘யெர்சினியா பெஸ்டிஸ்’ (Yersinia pestis) பாக்டீரியாவுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
சாதாரண பிளேக் நோயைப் போலன்றி, ‘நுரையீரல் பிளேக்’ நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும் தன்மையுடையது. இது பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் சுவாசத் துளிகள் மூலம் மற்றொரு நபருக்கு மிக வேகமாகப் பரவக்கூடும் என்பதால் அதிக அபாயகரமானதாகக் கருதப்படுகிறது.
சடாரென ஏற்படும் காய்ச்சல், தலைவலி, பலவீனம், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி மற்றும் ரத்தம் கலந்த சளி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சைகளை அளித்தால் இதைக் குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் அமைதி காக்க ஆளுநர் வேண்டுகோள்:
இர்குட்ஸ்க் பிராந்திய ஆளுநர் இகோர் கொப்சேவ் (Igor Kobzev), பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். “அபாயகரமான தொற்றுநோய் பரவல் சந்தேகத்தின் பேரில் அவசரக் கூட்டம் கூடி நிலைமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது; தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.



