காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73. ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூன்று முறை அமைச்சராகவும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த நஸ்ருல் இஸ்லாம் வெள்ளிக்கிழமை ஆக்சிஜன் அளவு அபாயகரமாக குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோய் அமைச்சரவையில் 2002 முதல் 2016 வரை மூன்று முறை அமைச்சராக இருந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் மோரிகான் மாவட்டத்தில் உள்ள லஹிரிகாட் சட்டமன்றத் தொகுதியை இஸ்லாம் ஐந்து முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், அதே நேரத்தில் அவரது மகன் டாக்டர் ஆசிப் முகமது நாசர் 2021 இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் முதல்வர் கோகோய் அமைச்சரவையில், உணவு மற்றும் சிவில் சப்ளை, சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் அமைச்சர் பதவி வகித்தவர். அமைச்சரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.