சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 17-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஏசுதாஸ் (50). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இவர் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த யோகேஷ் என்பவர் “காட்டான் ராஜ் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார்” எனக் கூறி அவரை வீட்டின் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே காத்திருந்த ராஜசேகர் என்கின்ற காட்டான் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள், ஏசுதாஸை மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயக்கமடைந்த ஏசுதாஸை, அவரது மனைவி மோகனா மற்றும் உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எம்கேபி நகர் போலீஸார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு புளியந்தோப்பு பகுதியில் பதுங்கியிருந்த ராஜசேகர் (எ) காட்டான் ராஜ் (29), நியமதுல்லா (29), அருண்குமார் (20), யோகேஷ் (எ) காலியா (28) மற்றும் முத்துவேல் (எ) காட்டு ராஜா (24) ஆகிய 5 பேரைப் பிடித்தனர். அப்போது தப்பியோட முயன்றதில் காட்டான் ராஜுக்குக் காலும், அருண்குமாருக்குக் கையும் உடைந்ததால், இருவருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது.
விசாரணையில், காட்டான் ராஜின் தாயார் சங்கீதா அப்பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் கோவிலைப் பராமரித்து வந்ததாகவும், கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏசுதாஸ் அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது. தாயார் கூறிய தகவலால் ஆத்திரமடைந்த காட்டான் ராஜ், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏசுதாஸைக் கொலை செய்ய முயன்றுள்ளார். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார், தலைமறைவாக உள்ள சங்கீதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.



