காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின்போது, இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தலைவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்; “எனது நண்பரான அதிபர் டிரம்ப் உடன் உரையாடினேன், காசா அமைதித் ஒப்பந்தத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்தோம். வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.