கூகிள் வழங்கும் 15GB இலவச சேமிப்பகம் கூகுளின் Gmail, Google Drive மற்றும் Google Photos ஆகிய சேவைகளுக்குப் பகிரப்பட்டதாகும். இதனால், விரைவில் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் நிரம்பி, புதிய மின்னஞ்சல்கள் வராமல் போகும் நிலை ஏற்படலாம். ஆனால், கூடுதல் பணம் செலுத்துவதற்கு முன், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் சில நிமிடங்களில் போதுமான இடத்தை காலி செய்ய முடியும்.
முதலில், பெரிய அளவிலான மின்னஞ்சல்களைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜிமெயில் தேடல் பட்டியில் “size:10MB” என டைப் செய்தால், 10MB-க்கு மேல் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டப்படும். இதில் தேவையற்ற வீடியோக்கள், PDF-கள் அல்லது பழைய கோப்புகள் இருந்தால் அவற்றை நீக்குவதன் மூலம் உடனடி இடம் கிடைக்கும்.
அடுத்ததாக, Promotions மற்றும் Social போன்ற டேப்களில் இருக்கும் மின்னஞ்சல்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும். “category:promotions” மற்றும் “category:social” என தேடி, இவை அனைத்தையும் bulk-ஆக நீக்கலாம். பெரும்பாலும் விளம்பர மின்னஞ்சல்கள் என்பதால், இவற்றை நீக்குவதில் எந்த இழப்பும் இருக்காது.
நீங்கள் நீக்கிய மின்னஞ்சல்கள் நேரடியாக அழியாது; அவை Trash கோப்புறையில் 30 நாட்கள் இருக்கும். அதனால் “in:trash” என தேடி, “Empty trash now” என்பதை அழுத்தி முழுமையாக காலி செய்ய வேண்டும். அதேபோல் “in:spam” கோப்புறையையும் காலி செய்வது அவசியம்.
மற்றொரு முக்கியமான விஷயம் தேவையில்லாத செய்திமடல்களிலிருந்து (newsletters) unsubscribe செய்வது. ஒவ்வொரு மின்னஞ்சலின் கீழும் இருக்கும் “Unsubscribe” link-ஐ பயன்படுத்தி விலகினால், எதிர்காலத்தில் தேவையற்ற மின்னஞ்சல்கள் வருவதைத் தடுக்கலாம்.
மேலும், கூகுள் போட்டோவில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் உங்கள் ஸ்டோரேஜை நிரப்பும். பழைய, அல்லது தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவதன் மூலம் கூடுதல் இடம் கிடைக்கும். அதேபோல் Google Drive-இல் பெரிய கோப்புகளை சரிபார்த்து நீக்க வேண்டும். storage page-ஐ திறந்து, அதிக இடம் எடுத்துக் கொண்ட கோப்புகளை கண்டறிந்து நீக்கினால், சில நிமிடங்களில் பல ஜிபி இடம் காலியாகும்.
இறுதியாக, “has:attachment” என தேடி, இணைப்புகளுடன் வரும் மின்னஞ்சல்களைப் பாருங்கள். முக்கியமான கோப்புகளை உங்கள் கணினியில் டவுன்லோடு செய்து வைத்து, அசல் மின்னஞ்சலை நீக்கலாம். இந்த எளிய 7 முறைகளையும் பின்பற்றினால், 2 முதல் 3GB வரை சேமிப்பிடத்தை எளிதாகப் பெற முடியும். இதனால், உங்கள் ஜிமெயில் மீண்டும் சீராக செயல்பட்டு, புதிய மின்னஞ்சல்கள் தடையின்றி வரத் தொடங்கும்.
Read more: இந்தியாவில் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட டாப் 10 மாநிலங்கள்..! லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா..?



