“ஒரு பஸ் வருமா?” என்று வெயிலிலும் மழையிலும் சாலையோரம் காத்திருந்த நிலை இனி மாறப்போகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வாக, ரூ.2.4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. எண்ணூர் ஹை ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம், இதுவரை தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் முறையான பேருந்து நிலைய வசதியின்றி பயணித்து வந்தனர்.
முன்பு ரயில்வேக்கு சொந்தமான காலி இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகளுக்கு அமருமிடம், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட போதுமானதாக இல்லை. மழை பெய்தாலும், வெயில் கொளுத்தினாலும் பயணிகள் அருகில் இருந்த மரங்களின் கீழ் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில், ரயில்வே இடம் 32 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 16,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, தனித்தனி கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி பொதுமக்களுக்கு மட்டுமின்றி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக போக்குவரத்து ஊழியர்களுக்கான டைம் கீப்பிங் அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால், தண்டையார்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள 32-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக கொருக்குப்பேட்டை, மணலி, நெடுஞ்செழியன் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண வசதி மேம்படும். அதே நேரத்தில், முன்பு தண்டையார்பேட்டையில் இருந்து இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள முக்கிய பேருந்து சேவைகளையும் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
159D, 1F, 4D, 170E, 44C, 15A உள்ளிட்ட வழித்தடங்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ திறப்பு விழாவுக்கான தேதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இதனால், நான்கு தசாப்தங்களாக நீடித்த தண்டையார்பேட்டை மக்களின் பேருந்து நிலைய கனவு விரைவில் நனவாக உள்ளது.
Also Read: “அம்மாவை ஜெயிலில் போடுங்க!” போலீஸ் ஸ்டேஷனில் 3 வயது சிறுவன் கொடுத்த புகார்..! வைரலாகும் வீடியோ..



