உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருணாகரன் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் ஜூன் 24 அன்று முத்து பாலகிருஷ்ணன் தனது பைக்கில் சென்ற போது திடீரென வந்த லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி முத்து பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகி முத்துபாலகிருஷ்ணனை, தி.மு.க. நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்று செய்திகள் வருகின்றன.
இதையும் “தனிப்பட்ட கொலை” என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடந்து செல்ல முனையுமா? தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு தி.மு.க.-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
Read more: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை.. அரசின் சூப்பர் திட்டம்.. ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?