கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள கலயநாடு பகுதியில், குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி ஒருவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக் மேத்யூ (44), கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஷாலினி (39) தி.மு.க. கொல்லம் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வந்தார். இவர்களுக்கு 16 மற்றும் 11 வயது கொண்ட இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறால், கடந்த சில மாதங்களாக ஷாலினி தனது பெற்றோர் வீட்டில் தங்கி வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் ஐசக், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், வீட்டுக்குள் நுழைந்து, மகன்களின் கண் முன்னே ஷாலினியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். சம்பவ இடத்திலேயே ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். நேரில் பார்த்த குழந்தைகள் கத்தி அழ தொடங்கியதும் ஐசக் அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஐசக் தனது முகநூல் பக்கத்தில் நேரலையாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் நகைகளும் வீணானது. என் மகன்களில் ஒருவருக்கு புற்றுநோய். ஆனால் என் மனைவி ஆடம்பர வாழ்க்கையை விரும்பி தாய் வீட்டில் தங்கி வந்தார். அதனால்தான் அவரை கொன்றுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, காலை 9 மணியளவில் ஐசக் நேராக காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். போலீசார் உடனே ஷாலினியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஐசக்கை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. கொல்லம் மாவட்ட மகளிரணி செயலாளரை வீடு புகுந்து கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.