தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க-வினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியொ வெளியிட்ட நிலையில், அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதி. விவசாயிகளான இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் இழப்பீடு தொகை கிடைத்துள்ளது.
இதை தெரிந்து கொண்ட பாஜவை சேர்ந்த மாவட்ட செயலாளர் சாமிநாதன் என்கிற ராஜராஜசாமி, கோகுல கண்ணன், ராசுகுட்டி ஆகியோர் இழப்பீடு தொகை கிடைக்க நாங்கள் தான் காரணம் என்றும், எங்கள் குழுவினர் தான் அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்தோம் என்று கூறி இதற்காக ரூ.10 லட்சம் வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். வேறுவழியின்றி ரூ.10 லட்சத்தை நாகராஜ்- நாகமணி தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் பணம் கேட்டு பாஜ நிர்வாகிகள் மிரட்டல் விடுத்து வருவதாக நாகராஜ், நாகமணி தம்பதியின் இளைய மகனான ஐடி ஊழியர் அருணாச்சலம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், ‘எனது சகோதரன் உயிரிழந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த பாஜவை சேர்த்த ராஜராஜசாமி, கோகுல கண்ணன், ராசுகுட்டி ஆகியோர் துக்கம் விசாரிக்க வீட்டிற்கு வந்தனர். அப்போது வழக்கு நடத்துவதற்கு ஆலோசனைகளையும் உதவிகளும் செய்து கொடுப்பதாக கூறினர்.
இந்நிலையில் இழப்பீடு பணம் வந்தவுடன், எங்கள் ஆலோசனைப்படி தான் வழக்கு நடந்தது எனவே அதற்கான பணம் வேண்டும் என்று கூறி 10 லட்சம் ரூபாயை கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் தேர்தல் வருகின்றது என்பதால் செலவுக்கு பணம் வேண்டும் என பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி, பாஜவை சேர்ந்த கோகுல கண்ணன், ராஜராஜசாமி ஆகியோர் மிரட்டுகின்றனர். 10 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை எனில் குடும்பத்தில் அனைவரையும் இரவோடு இரவாக தூக்கி விடுவோம், கோவையில் அண்ணாமலைக்கு பவர் உள்ளது என்று மிரட்டல் விடுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை போலீசில் புகார் கோவை அன்னூர் உதவி காவல் ஆய்வாளருக்கு அண்ணாமலை சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், அன்னூரைச் சேர்ந்த சாமிநாதன்(எ) ராஜராஜசாமி, கோகுல கண்ணன்,ராசுக்குட்டி ஆகியோர் நான் பணம் கேட்டதாக அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் மற்றும் தாய் நாகமணி ஆகியோரை மிரட்டி உள்ளதாக அறிகிறேன். அந்த நிகழ்வுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே, என் கவனத்திற்கு வந்த சங்கதிகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.