கள்ளக்காதல் விவகாரங்களில் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சினையாக மாறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அஞ்சுவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த தொடர்பு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுபம் வீட்டில் இல்லாத நேரங்களில் நிதின் அங்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிகிறது. இதுபற்றி கணவருக்கு தெரியவந்ததும், அவர் அஞ்சுவை கண்டித்துள்ளார். ஆனால், நிதினுடனான தொடர்பை கைவிட அஞ்சு மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவரின் எதிர்ப்பையும் மீறி நிதினை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை அதிகரித்த நிலையில், சுபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுபம், அஞ்சு மற்றும் நிதின் ஆகிய மூவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சுபம் தனது நிலைப்பாட்டை போலீசாரிடம் தெளிவாக தெரிவித்தார். அஞ்சு தன்னுடன் வாழ வேண்டும் அல்லது நிதினுடன் செல்ல வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் இருவருடனும் குடும்பம் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அஞ்சுவின் பதில் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரையும் விட்டுவிட முடியாது, நிதினுடனான உறவையும் கைவிட முடியாது என்றும், இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மூவரிடமும் போலீசார் தனித்தனியாக பேசி பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், ஒருவரது நிலைப்பாட்டில் இருந்து மற்றொருவர் விலகாததால் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால், இந்தக் குடும்ப விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ விரும்புவதாக பெண் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: 93 வயதிலும் செம ஸ்ட்ராங்! சமீரா ரெட்டியின் தந்தை சொன்ன ஆரோக்கிய ரகசியம் இதுதான்!



