விளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள் நாளடைவில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, இறுதியில் கொலை, தற்கொலை போன்ற விபரீதங்களிலும் முடிந்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் பெரும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (48). இவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சிவகுமாரின் நண்பரான காம்பாய்கடை பகுதியைச் சேர்ந்த அச்சு என்ற அச்சுதானந்தனுக்கும், சுஜாதாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அச்சுதானந்தனின் மனைவி பரிமளா, சுமார் 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரை தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது தனது கணவரை கண்டிப்பதாகவும், சிவகுமாரும் தனது மனைவி சுஜாதாவை கண்டிக்குமாறும் பரிமளா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவர் சிவகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு, அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து கடையிலிருந்து உடனடியாக வீட்டிற்கு சென்ற சிவகுமார், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுஜாதாவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஜாதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுஜாதா உயிரிழந்த தகவலை அறிந்த அச்சுதானந்தன் மனவேதனையில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜாதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



